மல்லள்ளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இளம்பெண் சாவு; காப்பாற்ற முயன்ற உறவினரும் உயிரிழந்த பரிதாபம்

மடிகேரியில் உள்ள மல்லள்ளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-04-18 21:33 GMT
உயிரிழந்த திவ்யா மற்றும் சசிகுமார்.
குடகு: மடிகேரியில் உள்ள மல்லள்ளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினரும் பரிதாபமாக உயிரிழந்தார். 

மல்லள்ளி நீர்வீழ்ச்சி

குடகு மாவட்டம் மடிகேரியில் புகழ்பெற்ற மல்லள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் சுற்றுலா வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மல்லள்ளி நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 

இந்த நிலையில் சுண்டிகொப்பாவை சேர்ந்த சசிகுமார் (வயது 30) என்பவர் தனது உறவினர் திவ்யா (20) என்பவர் உள்பட 5 பேருடன் மல்லள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் மல்லள்ளி நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்தனர். 

2 பேர் சாவு

அந்த சமயத்தில், திவ்யா நீர்வீழ்ச்சி அருகே நின்று கொண்டு அருவியின் அழகை ரசித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகமாக சென்றதால் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்து அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

அப்போது சசிகுமார், தண்ணீரில் குதித்து திவ்யாவை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அதற்குள் திவ்யா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரை காப்பாற்ற சென்ற சசிகுமாரும் நீச்சல் அடிக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். சிறிது நேரத்தில் அவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள் மடிகேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தண்ணீரில் மூழ்கி பலியான சசிகுமார் மற்றும் திவ்யாவின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பலியான 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 

இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்