டெல்லியின் சுகாதார கட்டமைப்பு அதன் எல்லையை எட்டிவிட்டது - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லி சுகாதாரத்துறை கட்டமைப்பு நிலைகுலைவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-19 08:57 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. டெல்லியில் நேற்று ஒரேநாளில் 25 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கிடையில், டெல்லியில் இன்று இரவு 8 மணி முதல் முதல் வரும் 26-ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய காரணங்கள் இன்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது. 

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது,

6 நாட்களை கொண்ட சிறிய ஊரடங்கு இது. புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஊரடங்கை மேலும் நீட்டிக்க தேவை ஏற்படாது என நம்புகிறேன்.

அடுத்த 6 நாட்களில் டெல்லியில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்வோம். எங்களுக்கு உதவும் மத்திய அரசுக்கு நன்றி. ஊரங்கு காலம் ஆக்சிஜன் வசதி, மருத்துவ வசதியை ஏற்படுத்த பயன்படுத்தப்படும். அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 23 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 முதல் 4 நாட்களில் தினசரி சராசரியாக கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினமும் 25 ஆயிரம் நோயாளிகள் வந்தால் அமைப்பு அனைத்தும் நொறுங்கி விடும். படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

டெல்லியின் சுகாதார கட்டமைப்பு அதன் எல்லையை விட்டு நீண்டுள்ளது. அது தற்போது அழுதத்தில் உள்ளது. டெல்லி சுகாதாரத்துறை கட்டமைப்பு நிலைகுலைவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது. டெல்லியில் கொரோனாவின் 4-வது அலை வீசத்தொடங்கியுள்ளது. 

டெல்லியின் சுகாதார கட்டமைப்பு அதன் எல்லையை எட்டிவிட்டது. சுகாதார கட்டமைப்பு நிலைகுலைந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அது தனது எல்லையை எட்டிவிட்டது' என்றார்.

மேலும் செய்திகள்