சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு - அரசியல் தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

Update: 2021-04-22 09:18 GMT
புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர் சீதாராம் யெச்சூரி. இவரின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி. 34 வயதான ஆஷிஸ் யெச்சூரி முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில், ஆஷிஸ் யெச்சூரிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி உயிரிழப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தனது மகன் ஆஷிஸின் அகால, துயரகரமான மறைவுக்கு சீதாராம் யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தனது மகன் ஆஷிஸை இழந்துவாடும் சீதாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயர இழப்பை தாங்கும் வலிமையை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரியின் டுவிட்டர் பதிவை மேற்கொள்காட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பேரழிவு தரும் இந்த செய்தியால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஒரு பெற்றோராக இந்த இழப்பு மற்றும் வருத்தத்தை தாங்க உங்களுக்கு வலிமை கிடைக்கட்டும். தமிழ்நாடு மக்கள் உங்களுடன் இணைந்து வருத்தப்படுகிறார்கள். உங்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், பிரார்த்தனையையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆஷிஸ் யெச்சூரியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருந்தமும், வேதனையும் அடைந்தேன். இந்த கடினமான சூழ்நிலையில் தோழர் சீதாராம் யெச்சூரிக்கும் அரவது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்