தொற்றுநோயின் மோசமான இரண்டாவது அலை: இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா அறிவிப்பு

கொரோனா தொற்றுநோயின் மோசமான இரண்டாவது அலைகளை எதிர்கொண்டு வரும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

Update: 2021-04-22 12:31 GMT
Image courtesy : Reuters
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா  தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 22 லட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 104 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்படி இந்தியாவின் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின்  எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 1. 6 கோடியாக உள்ளது, இது அமெரிக்காவை அடுத்து இந்தியா உள்ளது.

கொரோனா தொற்றுநோயின் மோசமான இரண்டாவது அலைகளை இந்தியா  எதிர்கொண்டு வருவதால், இந்தியாவுக்கு கொரோனா  தடுப்பு ஆதரவு மற்றும் மருத்துவ பொருட்களை வழங்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா தொற்று   குறித்து இன்று சீன அரசு ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இந்தியாவுக்கு சீனா உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது கொரோனா  தொற்றுநோய் அனைத்து மனிதகுலத்திற்கும் பொதுவான எதிரி. தொற்றுநோய்க்கு எதிராக போராட சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.

இந்தியாவில் தொற்றுநோய் நிலைமை கடுமையானது என்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவப் பொருட்களில் தற்காலிக பற்றாக்குறை இருக்கிறது. இந்தியாவுக்கு தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம், இதனால் அவர்கள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் செய்திகள்