கொரோனா பரவல் காரணமாக மும்பை மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணிக்க தடை

மும்பையில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதை உறுதி செய்ய ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது.

Update: 2021-04-22 23:37 GMT
மும்பை,

மும்பையில் நோய் பரவலை கட்டுப்படுத்த, மின்சார ரெயில்களில் பொது மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மின்சார ரெயில்களில் மாநில அரசால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை செல்வோர், மாற்றுத்திறனாளிகள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் ரெயில் நிலையங்களுக்குள் பொது மக்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள ரெயில்நிலையங்களில் முக்கிய நுழைவு வாயில்கள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன. உரிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே நுழைவதை தடுக்க மற்ற வாசல்கள் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் ரெயில்வே போலீசார் பயணிகளின் அடையாள அட்டையை வாங்கி சோதனை நடத்திய பிறகு தான் உள்ளே அனுமதிக்கின்றனர். இதுகுறித்து மேற்குரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், “ மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை உள்ள நபர்கள் மட்டுமே மின்சார ரெயில்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல உரிய அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே ரெயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வழங்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்