கேரளாவில் இரண்டு நாட்கள் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு

கேரளாவில் இன்றும், நாளையும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-04-23 18:53 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே தற்போது இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநிலம் முழுவதும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனங்களில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் வழி முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அத்தியாவசிய பணிக்கு செல்வோர் தகுந்த அடையாள அட்டை அல்லது ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளான மருத்துவம், பால், பத்திரிகை வினியோகத்திற்கு தடை இல்லை.

அதே போல் மளிகை கடைகள், காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி கடைகளுக்கு இரவு 7.30 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கலாம். ஆனால் ஓட்டல்களை திறக்க கூடாது. தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலா மையங்கள் மூடப்படும். 

அரசு, தனியார் பொது பஸ் போக்குவரத்திற்கு தடை இல்லை. அதே போல் சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. நோயாளிகள், தடுப்பூசி போட செல்வோர் தேவைப்பட்டால் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், புதுமனை புகுவிழா ஆகியவற்றிற்கு தடை இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்