சொத்து விவரங்களை கொண்ட இ-அட்டை வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சொத்து விவரங்களை கொண்ட இ-அட்டை வழங்கும் திட்டத்தை, அரியானாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Update: 2021-04-24 21:45 GMT
சண்டிகார்,

நாட்டு மக்களுக்கு அவர்களது சொத்து விவரங்களை கொண்ட இ-அட்டைகள் வழங்குவதற்காக மத்திய அரசு ‘ஸ்வாமித்வா’ திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி அரியானாவில் உள்ள 1,308 கிராம மக்களுக்கு வீடுகளுக்கான சொத்து அட்டைகளை வழங்கும் விழா, காணொலி காட்சி வழியாக நேற்று நடந்தது. 

பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு இந்த திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு சொத்து விவரம் கொண்ட இ-அட்டைகளை வழங்கினார். 7 மாவட்டங்களின் பஞ்சாயத்துகளுக்கு தேசிய அளவிலான பஞ்சாயத்து விருதுகளை வழங்கி அவர் கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் 7 மாநிலங்களில் உள்ள 5,002 பஞ்சாயத்துகளை சேர்ந்த 4.09 லட்சம் பேருக்கு இ-சொத்து அட்டை வழங்கப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, கொரோனாவை கையாள்வதில், குறிப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பஞ்சாயத்துகளின் பங்கை வெகுவாக பாராட்டினார். அப்போது அவர்கூறியதாவது:-

“இந்த கடினமான கால கட்டத்தில் ஏழைமக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு மே, ஜூன் மாதங்களில் ரேஷன் மூலம் இலவச உணவு தானியம் வழங்க தீர்மானித்தது. ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தால், 80 கோடிப்பேர் பலன் அடைவார்கள். ஒரு குடும்பம் கூட பட்டினி கிடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, நமக்கு உள்ளது. எல்லா கொள்கைகளிலும், முன் முயற்சிகளிலும் கிராமங்களை மத்திய அரசு கருத்தில் கொள்கிறது. 

ஸ்வாமித்வா திட்டத்தின்கீழ் 4.09 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு இ-சொத்து அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு ரூ.2.25 லட்சம் கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. பஞ்சாயத்துகள் புதிய உரிமைகளை பெறுகின்றன” என்று அவர் கூறினார். 

மேலும் செய்திகள்