கர்நாடகத்தில் 1,100 பேருடன் உதவி மையம் அமைக்க முடிவு - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்க 1,100 பேருடன் உதவி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2021-04-27 22:51 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. அதே போல் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. 

இதனால் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 27-ந்தேதி (நேற்று) இரவு 9 மணி முதல் 11-ந் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது.

இந்நிலையில், கர்நாடகத்தில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்க 1,100 பேருடன் உதவி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்க 1,100 பேருடன் உதவி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே உள்ள உதவி மையத்தில் 400 பேர் பணியாற்றுகிறார்கள். இந்த உதவி மையத்திற்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும் ரூ.20 கோடி செலவில் தொலைதூர மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். பெங்களூருவில் சுமார் 3,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா மருத்துவமனை அமைக்க முடிவு செய்துள்ளோம். 

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்