கொரோனாவுக்கு ஒரேநாளில் 1,000-ஐ நெருங்கிய உயிரிழப்பு பிணக்குவியலால் நிரம்பி வழியும் மயானங்கள்

மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 985 பேர் கொரோனாவால் பலியானார்கள். இதனால் மயானங்கள் பிணக்குவியல்களால் நிரம்பி வழிகின்றன.

Update: 2021-04-28 22:43 GMT
கோப்பு படம்
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படுமோசமாக அதிகரித்து வருகிறது. இந்த வகையில் நேற்றும் மராட்டியத்தில் புதிதாக 63 ஆயிரத்து 309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 
இதன்மூலம் இதுவரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 44 லட்சத்து 73 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது. 

இதேபோல நேற்று ஒருநாளில் மட்டும் புதிய உச்சமாக கொரோனாவுக்கு உயிரிழப்பு 1,000-ஐ நெருங்கியது. அதன்படி 985 பேர் பலியானார்கள். இதன்மூலம் நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழப்பு பெருமளவு அதிகரித்து இருப்பதன் காரணமாக ஆஸ்பத்திரி பிணவறைகளில் உடல்களை வைக்க இடமில்லாத சூழல் நிலவுகிறது. மேலும் மயானங்கள் பிணக்குவியல்களால் நிரம்பி வருகின்றன. உடல்களை தகனம் செய்ய பெரும் திண்டாட்டம் நிலவி வருகிறது. 

இந்த துயரத்துக்கு மத்தியில் ஆறுதல் தரும் விதமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 61 ஆயிரத்து 181 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதன் முலம் நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 30 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 73 ஆயிரத்து 481 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தலைநகர் மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 4 ஆயிரத்து 926 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது. 
அதேபோல மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 78 பேர் இறந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்