ஆக்சிஜன் விநியோக விவகாரம்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

ஆக்சிஜன் விநியோக விவகாரத்தில் மத்திய அரசு மீது முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கடுமையான விமர்சனங்களை முவைத்துள்ளார்.

Update: 2021-05-01 20:00 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக 3 லட்சம் பேருக்கு ஏற்பட்டு வந்த பாதிப்பு புதிய உச்சமாக நேற்று காலை வெளியான நிலவரத்தில் 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 1 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கை வசதி, மருந்து உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையின் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. 

அதேபோல், ரெம்டெசிவிர் மருந்துகளும் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும்போது தமிழக அரசு நிர்வாகத்திடம் எந்த வித கலந்தாலோசனையிலும் ஈடுபடாமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆக்சிஜன் விநியோக விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில்,
துக்ளக் தர்பார் அளவிற்கு மத்திய அரசு மூழ்கிவிட்டது. தமிழகத்தின் ஆக்சிஜன் தேவைக்கான மூலாதாரமாக இருந்த ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆக்சிஜன் தெலுங்கானாவிற்கு திசைதிருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடாகா மற்றும் ஒரிசாவில் இருந்து ஆக்சிஜனை வாங்கிக்கொள்ளுங்கள் என தமிழக அரசுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

எல்லோரும் தங்கள் உணர்வை இழந்துவிட்டார்களா? வளங்களை சரியாக பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து யாரும் கேள்விப்படவில்லையா? மத்திய கட்டுப்பாடு மீதான மத்திய அரசு கைவிட்டு ஆக்சிஜன் வசதிகளை திறம்பட கையாள மாநில அரசுகளை அனுமதிக்க வேண்டும்’ என்றார்.  

மேலும் செய்திகள்