புதுச்சேரி அமைச்சரவையில் சமபலம் கேட்டு என்.ஆர்.காங்கிரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி

அமைச்சரவையில் சமபலம் கேட்டு என்.ஆர்.காங்கிரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி கொடுத்து வருவதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-09 03:23 GMT

துணை முதல்-அமைச்சர்

புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணியின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். அது தவிர்த்து இரு கட்சிகளுக்கும் தலா 3 அமைச்சர் பதவிகள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பா.ஜ.க.வுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டு அது தவிர 2 அமைச்சர் பதவிகள் பெற ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக புதுவை வந்த மத்திய உள்துறை மந்திரி கி‌‌ஷண்ரெட்டி நிருபர்களிடம் கூறினார். துணை முதல்-அமைச்சர் பதவியை நமச்சிவாயத்துக்கு வழங்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

முக்கிய இலாகாக்கள்

இதுதவிர மேலும் 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. அந்த பதவிகளை பெற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதேபோல் என்.ஆர்.காங்கிரசிலும் 3 பேர் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளனர். அமைச்சர் பதவிகளில் யார், யாரை நியமிப்பது என்பது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். அதேநேரத்தில் பா.ஜ.க.வும் துணை முதல்-அமைச்சர் தவிர சமபலத்தில் அமைச்சரவையில் இடம் கேட்பதாகவும், முக்கியத்துவம் வாய்ந்த இலாகாக்களை ஒதுக்குமாறும் கேட்பதாக தெரிகிறது. ஆனால் அவற்றை விட்டுத்தர முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுவரை சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முடிவு எட்டப்படவில்லை

இதனால் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இதுவரை முடிவு எட்டப்படவில்லை. எனவே அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பட்டியலை கவர்னரிடம் ரங்கசாமி வழங்கவில்லை.

மேலும் உடல்நலக்குறைவு காரணமாக கொரோனா தடுப்பு தொடர்பாக அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்டவற்றையும் இதுவரை ரங்கசாமி நடத்தவில்லை. இதற்கிடையே அமைச்சரவை விரிவாக்கத்தை விரைந்து முடிக்க பா.ஜ.க. சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

சலசலப்பு

இதுதவிர நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் பா.ஜ.க.வே நிரப்பிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவும் என்.ஆர்.காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்று விரைவில் சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில் புதுவையில் இன்னும் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார்? என்பது பற்றி முடிவு செய்யாமல் இழுபறியில் இருந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்