யாஸ் புயல் கரையை கடந்தது 10 க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பு; 3 லட்சம் வீடுகள் சேதம்

யாஸ் புயல் கரையை கடந்தது ஒடிசா- மேற்கு வங்காளத்தின் 10 க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன.

Update: 2021-05-26 10:59 GMT
படம்: PTI
கொல்கத்தா:

வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே  இன்று கரை கடந்தது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது.  கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. 

புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். 

பலத்த காற்றின் காரணமாக சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை மீட்புக் குழுவினர் உடனடியாக அப்புறப்படுத்தினர். 

புயல் காரணமாக மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா, துர்காபூர், ஒடிசாவின் புவனேஸ்வர், ஜார்சுகுடா, ரூர்கேலா விமான நிலையங்கள் மூடப்பட்டன. வர்த்தக விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவுக்கு இயக்கப்படும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

யாஸ் புயல் பாலசோருக்கு தெற்கே ஒடிசா எல்லையில் கரை கடக்கிறது. இதன் காரணமாக வடக்கு ஒடிசா மற்றும் கடலோர ஒடிசாவில் இன்று அதீத கன மழை பெய்யும். மேற்கு வங்காளத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஜார்க்கண்ட், பீகார், சிக்கிமில் தொலைதூர இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். 

இந்த புயல் நாளை காலை ஜார்க்கண்டை அடையும். புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது என்று  வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறி உள்ளார்.

ஒடிசாவில் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களும், மேற்கு வங்காளத்தில் தெற்கு மற்றும் வடக்கு 24 பராகனாக்கள், திகா, கிழக்கு மிடனாபூர் மற்றும் நந்திகிராம் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவின் 13 தாழ்வான  பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திகா நகரில் ஒருவர் இறந்துவிட்டார் - அவர் மீன் பிடிக்க முயன்றபோது அவர் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என கூறி உள்ளார். மேலும் மம்தா பானர்ஜி கூறும் போது 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.  மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.யாஸ் புயலால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை அரசு ஒதுக்கியுள்ளது 

புயல் கரை கடந்தபின்னர் ராணுவம் மற்றும் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை மேற்கொண்டுள்ளனர். சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை முதலில் வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணியும் நடைபெறுகிறது. 

ஒடிசாவில் புயல் ஆபத்து உள்ள பகுதிகளில் வசித்த 5.8 லட்சம் மக்களும், மேற்கு வங்காளத்தில் 15 லட்சம் மக்களும் முன்கூட்டியே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஒடிசாவில் மரம் விழுந்து ஒருவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணி நடைபெறுகிறது.

புயல் பலவீனமடைந்து  அடுத்த ஆறு மணி நேரத்தில், வட-வடமேற்கு ஜார்கண்ட் நோக்கி நகர்கிறது.

மேலும் செய்திகள்