“மலிவான அரசியலுக்கு இது நேரம் அல்ல” - தடுப்பூசி விவகாரம் குறித்து கெஜ்ரிவால் பதில்

மலிவான அரசியலில் ஈடுபடவோ, யாரையும் குற்றம் சொல்லவோ இது நேரம் இல்லை என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-29 21:04 GMT
புதுடெல்லி,

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழலில் மாநிலங்களுக்காக மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி சத்ரசால் அரங்கத்தில் இயங்கி வரும் தடுப்பூசி மையத்தை நேற்று பார்வையிட்ட அவர், தடுப்பூசி விவகாரத்தை அரசியலாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தடுப்பூசி விவகாரத்தில் எங்கே அரசியல் செய்யப்படுகிறது? மக்களுக்கு தடுப்பூசி தேவை. அது எங்கே கிடைக்கும் என்று மத்திய அரசு கூற வேண்டும். தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து அதை எங்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் அவற்றை அனைவருக்கும் வழங்குவோம்’ என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபடவோ, யாரையும் குற்றம் சொல்லவோ இது நேரம் இல்லை எனக்கூறிய கெஜ்ரிவால், தடுப்பூசி போடுவதே இந்த பிரச்சினைக்கான தீர்வு எனவும் குறிப்பிட்டார். எனவே தடுப்பூசி மட்டுமே வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 900 ஆக குறைந்திருப்பதாக கூறிய அவர், புதிய பாதிப்புகள் இப்படி குறைந்து கொண்டே சென்றால், தலைநகரில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். நேற்று (நேற்று முன்தினம்) வரை மாநிலத்தில் 450 கருப்பு பூஞ்சை நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்