கர்நாடகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 35 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 35 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2021-05-31 00:00 GMT
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கருப்பு பூஞ்சை நோய்
கர்நாடகத்தில் ஊரடங்கால் என்னவெல்லாம் நல்ல விஷயங்கள் நடந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். கொரோனா பாதிப்பு விகிதம் 47 சதவீதமாக இருந்தது. ஊரடங்கால் அது தற்போது 15 சதவீதமாக குறைந்துள்ளது. பிற மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 8 சதவீதமாக இருக்கிறது. கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்வார்.கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து உற்பத்திரியை அதிகரிக்க மத்திய மந்திரி சதானந்தகவுடா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக தனியார் மருந்து நிறுவனங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கர்நாடகத்தில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது. மத்திய அரசு 10 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகளை கர்நாடகத்திற்கு வழங்கியுள்ளது.

இலவசமாக சிகிச்சை
கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை சுமார் 35 பேர் இறந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த நோய் பாதித்தவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்நாடக அரசு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் இதுவரை 20 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து காங்கிரசார் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். பைசர், மாடர்னா தடுப்பூசி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடந்தி 
வருகிறது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்