ராணுவ நடவடிக்கையின் 37-வது நினைவுநாள்: பொற்கோவிலில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம்; நடிகர் திலீப் சித்து உள்ளிட்டோர் பங்கேற்பு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்கள் புனிதமாக கருதும் பொற்கோவிலில் 1984-ம் ஆண்டு, சீக்கிய பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர்.

Update: 2021-06-06 17:28 GMT

 அதனால், அவர்களை வெளியேற்ற அதே ஆண்டு ஜூன் 6-ந் தேதி ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ என்ற பெயரில் ராணுவம் உள்ளே அனுப்பப்பட்டது. இந்த சண்டையில் பலர் பலியானார்கள். இதன் 37-வது நினைவுதினத்தையொட்டி,  அமிர்தசரசில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பொற்கோவிலுக்குள், சிரோமணி அகாலி தளம் (மான்) தலைவர் சிம்ரஞ்சித்சிங் மான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நடிகர் திலீப் சித்துவும் கலந்து கொண்டார். பொற்கோவிலுக்குள் அவர்கள் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர். ஏராளமான இளைஞர்கள், ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை பிடித்து இருந்தனர்.

சீக்கியர்களின் தலைமை பீடமான அகால் தக்திலும் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டன. அகால் தக்த் தலைமை நிர்வாகி கியானி ஹர்பிரீத்சிங் பேசுகையில், ‘‘இந்த இனப்படுகொலை ஏற்படுத்திய ஆறாத ரணங்களை சீக்கியர்கள் மறக்கக்கூடாது. எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்