நமது பேச்சை கேட்க பிரதமர் மோடி 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார் - மம்தா பானர்ஜி பேச்சு

மாநில அரசுகளின் கோரிக்கையை கேட்க பிரதமர் மோடி 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-08 03:10 GMT
கொல்கத்தா,

மே மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கும் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளும் கொள்முதல் செய்யும் வகையில் திட்டத்தை பரவலாக்கியது.

இதன்படி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநிலங்களே தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகின்றன. அதைப்போல வெளிநாடுகளில் இருந்தும் நேரடியாக இறக்குமதி செய்யும் நடவடிக்கையிலும் இறங்கின. 

ஆனால் இந்த பணிகள் மாநிலங்களுக்கு பெரும் சவாலாக மாறின. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்காததால், பல மாநிலங்களில் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. மேலும், தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியை மத்திய அரசு, மாநில அரசு, தனியார் மருத்துவமனைகள் என 3 பிரிவினருக்கும் 3 விதமாக விலை நிர்ணயித்தது. இந்த விலை நிர்ணய முறையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்க்கு உரையாற்றினார். அப்போது, மாநிலங்கள் இனி தனியாக கொரோனா தடுப்பூசி செய்ய முடியாது எனவும், மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்ததற்கு பல்வேறு மாநில முதல்மந்திரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குங்கள் என்று பிப்ரவரி மாதம் முதல் பல முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மிகுந்த அழுத்தம் வந்த பிறகு நமது பேச்சையும் (மாநில அரசு) , நாம் கேட்டுக்கொண்டதையும் அமல்படுத்த பிரதமர் மோடி 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். 

கொரோனா தொற்று பரவிய தொடக்கத்தில் இருந்தே இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கனவே பலரது உயிரை வாங்கிவிட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மற்றும் அது தொடர்பான நிர்வாகம் இந்த முறை அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்