கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்தினருக்கு உடனடி ஓய்வூதியம் - மத்திய அரசு உத்தரவு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-09 03:52 GMT
புதுடெல்லி,

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்கான வழியை உறுதி செய்வது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பணியில் இருந்த அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்குள் ஓய்வூதியம் கிடைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து ஓய்வூதியம் கோரும் போது, ஒரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியம் கிடைப்பதை அனைத்து துறை செயலாளர்களும் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதே நடைமுறையை பின்பற்றலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்