பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும்: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும், ஏழை குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

Update: 2021-06-13 19:02 GMT
யெச்சூரி, டி.ராஜா
இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, விடுதலை கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் இணைந்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ள மக்களுக்கு உதவ வேண்டிய இடத்தில் உள்ள மத்திய அரசு, அதை செய்யாமல், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. மே 2-ந் தேதி 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 21 தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வாபஸ் பெறுங்கள்
இதனால், தொடர் விளைவாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. மொத்தவிலை குறியீட்டு எண் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆகவே, உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் உணவு பொருட்களின் விலை 5 சதவீதமும், அத்தியாவசிய பொருட்கள் விலை 10.16 சதவீதமும் அதிகரித்துள்ளது. இப்பொருட்கள் சில்லரை சந்தையை அடையும்போது, இன்னும் விலை கூடி விடுகிறது.பொருளாதார மந்தநிலையும், வேலையில்லா திண்டாட்டமும், பட்டினியும் நிலவும்போது இப்படி நடக்கிறது. பேராசை பிடித்தவர்கள், கள்ளச்சந்தையில் அத்தியாவசிய மருந்துகளை விற்கிறார்கள். அவர்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.

10 கிலோ உணவு தானியம்
வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதத்துக்கு ரூ.7 ஆயிரத்து 500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். தீபாவளி வரை 5 கிலோ உணவு தானியம் வழங்குவது போதுமானது அல்ல. 10 கிலோ உணவு 
தானியத்துடன், பருப்பு, சர்க்கரை, எண்ணெய், மசாலா பொருட்கள் அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகளின் மாநில குழுக்கள் அடுத்த 2 வாரங்களுக்கு போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்