லோக் ஜனசக்தி கட்சியின் புதிய தலைவரானார் பசுபதி குமார் பராஸ்

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவராக பசுபதி குமார் பராஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி சார்பில் நேற்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-17 21:52 GMT
பாட்னா, 

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார். அவரது மகன் சிராக் பாஸ்வான் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதே கட்சியின் தலைவராக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்.

பீகாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மத்தியில் பா.ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அங்கு பா.ஜனதா   ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.

எனினும் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். பிரதமர் மோடியுடன் நல்லுறவை பேணி வருகிறார்.

இதற்கிடையே அக்கட்சியை சேர்ந்த எம்.பி.யும், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரருமான பசுபதி குமார் பராஸ் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் சிராக் பஸ்வானுக்கு எதிராக கடந்த வாரம் போர்க்கொடி தூக்கினர். மேலும் அவரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினர்.

இதற்கிடையே லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவராக பசுபதி குமார் பராஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி சார்பில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்