தடுப்பூசி போடுவதில் முதியோர் புறக்கணிப்பா? மத்திய அரசு மறுப்பு

எளிதில் நோய் தாக்கவல்ல நபர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-07-02 05:37 GMT
(Representative Image: PTI)
புதுடெல்லி, 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம், அறிவியல் மற்றும் தொற்று நோயியல் ஆதாரங்கள் அடிப்படையிலும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுடனும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் நடந்து வருகிறது. இதில், ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசின் உறுதிப்பாடு ஆக்கப்பூர்வமாக இருக்கிறது.

ஆனால், தடுப்பூசி போடுவதில் முதியோரையும், நோய் எளிதில் தாக்கவல்ல ஏழைகள் உள்ளிட்டோரையும் புறக்கணிப்பதாகவும், பணக்காரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் செய்தி பரப்பப்படுகிறது.

 முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், நோய் எளிதில் தாக்கவல்லவர்களுக்கும் முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுகிறது. அதன்மூலம் நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். வருமான ஆதாரம் எதுவும் இன்றி, அனைவரும் இலவச தடுப்பூசி பெற உரிமை பெற்றவர்கள். 

இருப்பினும், பணம் செலுத்த வசதி இருப்பவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். எனவே, பணக்காரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறுவது தவறு.பதிவு செய்த சுகாதார பணியாளர்களில் 87 சதவீதம் பேருக்கும், முன்கள பணியாளர்களில் 90 சதவீதம் பேருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணைநோய்களை கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டோரில் 49.35 சதவீதம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, அவர்கள் வீடுகளுக்கு அருகிலேயே சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அடையாள அட்டை இல்லாத, எளிதில் நோய் தாக்கவல்ல நபர்களுக்கு தடுப்பூசி போடுவதன் தேவையை மத்திய அரசு உணர்ந்துள்ளது.

அதனால், அத்தகைய நபர்களை அடையாளம் காண மாவட்டம் தோறும் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, யாரையும் புறக்கணிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்