சுவேந்து அதிகாரியை சந்தித்த சொலிசிட்டர் ஜெனரலை பதவி நீக்க வேண்டும்; பிரதமருக்கு திரிணாமுல் எம்.பி.க்கள் கடிதம்

மேற்கு வங்காள எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான சுவேந்து அதிகாரி, டெல்லியில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை சந்தித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Update: 2021-07-02 18:39 GMT
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், சுகேந்து சேகர் ராய், மகா மைத்ரா ஆகியோர் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.அதில், மேற்கு வங்காள எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி, டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தபிறகு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உடனான அவரது ஆர்வமான சந்திப்பு நடந்துள்ளது. இது, துர்நாற்றம் வீசும் முறையற்ற செயல். சுவேந்து அதிகாரி, நாரதா, சாரதா ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாரதா வழக்கில் சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டில் ஆஜராகி வருகிறார். அதோடு, சாரதா சிட்பண்டு ஊழல் வழக்கில் சி.பி.ஐ.க்கு ஆலோசனையும் அளித்து வருகிறார்.

இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல், சுவேந்து அதிகாரி இடையிலான சந்திப்பு, முறையற்றது மட்டுமல்ல, முரண்பாடானதும் கூட. நாட்டின் 2-வது உயர்ந்த சட்ட அதிகாரியான சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு கறை ஏற்படுத்தும் செயல்.எனவே, சொலிசிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் நடுநிலைமை, நேர்மையை பராமரிக்கும் வகையில், அந்தப் பதவியில் இருந்து துஷார் மேத்தாவை நீக்குவதற்கான நடவடிக்கையை பிரதமர் எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்கூட்டி தெரிவிக்காமல் சுவேந்து அதிகாரி தனது வீட்டுக்கு வந்தபோதும், அவரை தான் சந்திக்கவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்