வாக்கு திருட்டு: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை விமர்சித்த காங்கிரஸ் மந்திரி ராஜினாமா

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.;

Update:2025-08-11 17:57 IST

பெங்களூரு,

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் பீகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் செயலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுயியில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் ஓட்டுப்போடதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்தனர்.

இதனிடையே, கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மாநில கூட்டுறவு மந்திரியாக ராஜண்ணா செயல்பட்டு வந்தார்.

அவர் வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டை விமர்சித்தார். இது தொடர்பாக நேற்று பேசிய ராஜண்ணா, வாக்காளர் பட்டியல் எப்போது தயாரிக்கப்பட்டது. நமது (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோதுதான் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்போது நாம் அனைவரும் அமைதியாக கண்களை மூடிக்கொண்டு இருந்தோம். வாக்காளர் பட்டியல் தொடர்பான நாம் பொதுவாக பேசினால் நாம் நிறைய பேச வேண்டும். இது தொடர்பாக நாம் பேசினால் சங்கடமான உண்மைகள் வெளியே வரும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளனர். அது உண்மைதான். அது நமது ஆட்சியில் நம் கண்முன்னே நடந்துள்ளன. இதற்காக நாம் வெட்கி தலைகுணிய வேண்டும். அப்போது நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருங்காலங்களில் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்’ என்றார்.

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மந்திரி ராஜண்ணா விமர்சித்த சம்பவம் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராஜண்ணா முதல்-மந்திரி சித்தராமையாவை இன்று சந்தித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை விமர்சித்த கர்நாடக காங்கிரஸ் மந்திரி ராஜகண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறித்து விமர்சனம் செய்த ராஜகண்ணா மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர். இந்த சூழ்நிலையில் ராஜகண்ணா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமாவை முதல்-மந்திரி ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்