பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இறந்த மனைவியின் உடலை கணவரையே சுமக்க வைத்த அவலம்

21-ம் நூற்றாண்டில் நவீன உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பெருமிதம் கொண்டிருந்தாலும், இன்னும் சில இடங்களில் மனிதர்கள் காட்டுமிராண்டி காலத்தில் இருந்து மீண்டு வரவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் ஒடிசாவில் நடந்துள்ளது.

Update: 2021-07-03 18:11 GMT
உதவ மறுத்த ஊழியர்கள்
அங்கு கந்தமால் மாவட்டத்தில், மோட்டிங்கியா கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா கன்ஹார். இவரது மனைவி ரத்த சோகையாலும், சுவாச கோளாறாலும் அவதிப்பட்டுள்ளார். அவரை சிகிச்சைக்காக கடந்த 29-ந் தேதி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல், கடந்த 1-ந் தேதி இறந்து விட்டார். அவரது உடலை பிண ஊர்திக்கு எடுத்துச்செல்வதற்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் உதவ மறுத்து விட்டார்கள்.

கணவர் சுமந்து சென்ற அவலம்
ஒரு பக்கம் மனைவியை இழந்த தீராத மனச்சுமை அழுத்தினாலும், மற்றொரு பக்கம் மனைவியின் உடலை கைகளில் ஏந்திக்கொண்டு 2-வது தளத்தில் இருந்து தரைத்தளத்துக்கு சுமக்க முடியாமல் சுமந்து சென்றார், கன்ஹார். தரைத்தளத்தில் ஒரு ‘ஸ்டிரெச்சர்’ காணப்பட்டது. அதில் மனைவியின் உடலை கிடத்தி, பிண ஊர்திக்கு அவரே தள்ளிச்சென்றார். வாகனத்துக்குள் உடலை ஏற்றிச்செல்ல அந்த வாகனத்தின் டிரைவரும் உதவ மறுத்து விட்டார். அந்த நேரத்தில் கன்ஹார், தனது 2 வயது குழந்தையை வைத்துக்கொண்டிருந்த, உடல் நலமற்ற தனது தந்தையின் உதவியை பெற்றார். குழந்தையை தரையில் இறக்கி விட்டு விட்டு, தந்தையும், மகனும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உடலை ஊர்திக்குள் எடுத்துச்சென்று கிடத்தி இருக்கிறார். கன்ஹார் தனது மனைவியின் உடலை சுமந்தவாறு சென்ற படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

ஊழியர்கள் இடைநீக்கம்
இறந்த பெண்ணின் உடலை பிண ஊர்திக்கு எடுத்துச்செல்ல ஆஸ்பத்திரி ஊழியர்களும், பிண ஊர்தி டிரைவரும் மறுத்ததற்கு காரணம், இறந்தவர் பழங்குடியினர் என்பதுதான். அவர் பழங்குடியினராக பிறந்தது விதியின் குற்றமா இல்லை, இந்த சாதிய உலகின் குற்றமா?

இப்போது அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்