சிவசேனாவும், பா.ஜனதாவும் எதிரிகள் இல்லை: தேவேந்திர பட்னாவிஸ்

சிவசேனாவும், பா.ஜனதாவும் எதிரிகள் இல்லை என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

Update: 2021-07-04 20:56 GMT
எதிரிகள் கிடையாது
மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. தேர்தலில் அந்த கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜனதா 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சிவசேனா 50-க்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கூட்டணி 
உடைந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து மகாவிகாஸ் அகாடி அரசை அமைத்தது.இன்று (5-ந் தேதி) மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதுகுறித்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.


 அப்போது அவர் கூறியதாவது:-

முடிவு எடுக்கப்படும்...
எங்கள் நண்பன் (சிவசேனா) கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எங்களுடன் சேர்ந்து போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர்கள், நாங்கள் யாரை (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) எதிர்த்து போட்டியிட்டோமோ அவர்களுடன் கைகோா்த்து கொண்டார். எனினும் அரசியலில் சாத்தியமற்றது என்று எதுவும் கிடையாது. சிவசேனாவும், பா.ஜனதாவும் எதிரிகள் கிடையாது. சில விஷயங்களில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். சூழல்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்பலப்படுத்துவோம்
இதேபோல தேவேந்திரபட்னாவிஸ் சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டும் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கொரோனா பரவலை காரணம் காட்டி சட்டசபை கூட்டத்தொடரை 2 நாட்கள் மட்டும் நடத்தி மகாவிகாஸ் அகாடி அரசு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறது. எனினும் நாங்கள் அரசின் உண்மையான முகத்தை அம்பலபடுத்துவோம். சட்டசபையில் பிரச்சினைகளை எழுப்ப எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்றால், மக்கள் மன்றத்தில் எழுப்புவோம். சட்டசபையில் மக்கள் நலப்பிரச்சினைகளை எழுப்ப முக்கியத்துவம் அளிப்போம்" என்றார்.

மேலும் செய்திகள்