மேற்குவங்காளம்: பாதுகாவலவர் தற்கொலை வழக்கில் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு

நந்திகிராம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-09 06:58 GMT
கொல்கத்தா,

மேற்குவங்காள பாஜக தலைவர்களில் சுவேந்து அதிகாரியும் ஒருவர். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் நடந்து முடிந்த மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார்.

இவர் 2018 ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அம்மாநிலத்தின் போக்குவரத்து துறை மந்திரியாக பணியாற்றி வந்தார். அப்போது, சுவேந்து அதிகாரியின் பாதுகாவலராக சப்ரதா சக்ரபோத்தி என்பவர் செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், சுவேந்து அதிகாரியின் பாதுகாவலர் சப்ரதா சக்ரபோத்தி கடந்த 2018 அக்டோபர் 13-ம் தேதி தனது வீட்டில் இருந்த போது தற்கொலை செய்துகொண்டார். தான் வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும், தற்போது வரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில், தனது கணவரின் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், இதில் பாஜக எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரிக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறி அவர் மீது சப்ரதா சக்ரபோத்தியின் மனைவி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரையடுத்து, பாதுகாவலர் சப்ரதா சக்ரபோத்தி உயிரிழப்பு சம்பவத்தில் சுவேந்து அதிகாரி மீது போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்