டெல்லியில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்- போக்குவரத்து பாதிப்பு

தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்து வரும் மழையால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-19 03:06 GMT
புதுடெல்லி, 

டெல்லியில் பருவமழை தொடங்கியுள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழையால் தலைநகர் டெல்லியில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நாட்டில் ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்து வரும் மழையால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் சாலையில் சென்ற வாகனங்கள் வெளிச்சத்திற்காக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளால் சாலைகளில் வாகனங்களும் ஓட தொடங்கி உள்ளன. திடீரென பெய்த கனமழையால் நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நத்தையாக ஊர்ந்து சென்றன. ஒரே இடத்தில் அதிக அளவிலான வாகனங்கள் குவியவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

முன்னதாக உத்தரபிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தான், டெல்லி ஆகிய இடங்களில் இன்று பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழை முதல், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளான பகதூர்கர், குருகிராம், மானேசர், ஃபரிதாபாத், பல்லப்கர், நொய்டா) அசாண்ட், சஃபிடான், கோஹானா, கன்னூர், சோனிபட், ரோஹ்தக், ஜஜ்ஜார் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 





மேலும் செய்திகள்