மராட்டிய மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

மராட்டிய மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update:2021-07-23 16:35 IST
புதுடெல்லி,

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் பல இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ராய்கட் மாவட்டம் தலாய் மற்றும் மலாய் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 30க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பல்வேறு இடங்களுக்கு செல்லும் சாலைகளும் பாலங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் படையினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே சதாரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும் 2 பேரைக் காணவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  மராட்டிய மாநிலம் ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவராண நிதியில் இருந்து தலா ரூ .2 லட்சம் காயமடைந்தவர்களுக்கு ரூ .50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மராட்டிய மாநிலம் ராய்காட்டில் நிலச்சரிசில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். 

பலத்த மழை காரணமாக மராட்டியத்தின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்