கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவியேற்பு

கர்நாடகாவின் 23-வது முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார்.

Update: 2021-07-28 05:34 GMT
பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து அவர் பதவி விலகினார். இதையடுத்து கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் எடியூரப்பா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன்ரெட்டி, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 

இதில் கட்சியின் சட்டசபை குழு தலைவராக அதாவது புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனை எடியூரப்பா அறிவித்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை மேடைக்கு வந்து எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் பசவராஜ் பொம்மை ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார்.

அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூருவில் உள்ளகவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி  ஏற்றுக்கொண்டார். 

மேலும் செய்திகள்