மருத்துவ கல்வி அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; மோடியிடம் ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் குழு வேண்டுகோள்

அகில இந்திய மருத்துவ கல்வி ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஆளும் கூட்டணியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவு எம்.பி.க்கள் குழு வேண்டுகோள் விடுத்தது.

Update: 2021-07-28 23:08 GMT
மோடியிடம் கடிதம்
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த மத்திய மந்திரி அனுப்பிரியா படேல் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தது. அவரிடம் ஒரு கடிதத்தை வழங்கியது.அதில், இளநிலை, முதுநிலை மருத்துவ கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தாங்கள் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

முன்னுரிமை கொடுக்க வேண்டும்
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வாரம் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இதில், மாநில மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 15 சதவீத இடங்களையும், முதுநிலை படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் தேசிய தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்க வேண்டும்.

இடஒதுக்கீடு மறுப்பு
மருத்துவ கல்விக்கான தேசிய ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் இடஒதுக்கீடு பெறுகின்றனர். ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்று எம்.பி.க்கள் குழு தெரிவித்தது.

மேலும் செய்திகள்