ஒடிசாவில் சிக்கித் தவித்த புதுச்சேரியை சேர்ந்த 73 வயது முதியவர் மீட்பு; சமூக வலைதளத்தால் குடும்பத்துடன் இணைந்தார்

ஒடிசா மாநிலத்தில் சிக்கித்தவித்த புதுச்சேரியை சேர்ந்த 73 வயது முதியவரை போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-07-29 02:28 GMT
மயங்கிய நிலையில் முதியவர்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் உணவு இன்றி பசி மயக்கத்தில் இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் அலோக் திரிபாதி, முதியவருக்கு உணவு கொடுத்து, அருகில் உள்ள காப்பகத்தில் தங்கவைத்தார்.முதியவரிடம் விசாரித்தபோது, அவர் தமிழில் பேசினார். அங்கு இருந்தவர்களுக்கு தமிழ் தெரியாததால், முதியவர் பேசியதை செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.அதில், தான் புதுச்சேரியை சேர்ந்தவர் என்றும், 6 மாதத்துக்கு முன்பு வேலை தேடி அலைந்தபோது உடல் சோர்ந்து போனதால், ரெயில் நிலையத்தில் நின்ற ரெயிலில் கடைசி பெட்டியில் ஏறி படுத்து தூங்கினேன். திடீரென்று கண்விழித்து பார்த்தபோது, ரெயில் சென்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உதவிக்கு யாரும் இல்லாததால் ஒடிசா வந்து சேர்ந்தேன் என்று கூறியிருந்தார்.

போலீசார் மீட்டனர்
இந்த வீடியோவை பார்த்த தாம்பரத்தை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லிப்சா என்பவர் முதியவரின் நிலை குறித்து புதுச்சேரி போலீஸ் சூப்பிரண்டு மாறனுக்கு தெரிவித்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில், ஒடிசாவில் தவிக்கும் முதியவர் சோரியாங்குப்பம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த சிவக்கொழுந்து (வயது 73) என்பது தெரியவந்தது.இதையடுத்து கரையாம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், போலீஸ்காரர் பிரவீன் ஆகியோர் ரெயில் மூலம் ஒடிசாவுக்கு சென்று முதியவரை காப்பகத்தில் இருந்து மீட்டு நேற்று முன்தினம் இரவு புதுவை திரும்பினர். பின்னர் முதியவரை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

பாராட்டு
ஒடிசாவில் இருந்து முதியவரை மீட்டுவந்த போலீசாரை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்