திருப்பதி மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: கமிஷனர் கிரிஷா

திருப்பதி மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என கமிஷனர் கிரிஷா தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-29 03:28 GMT
இதுகுறித்து திருப்பதியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவா் கூறியதாவது:-

கொரோனா பரவல் அதிகரிப்பு
திருப்பதி மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் வரும்போது முகக் கவசம் அணிந்து வர வேண்டும். முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள், வியாபாரிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.திருப்பதியில் பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த வாரம் 
குறைந்திருந்த கொரோனா தொற்று பரவல், இந்த வாரம் சற்று அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெளியில் சுற்றித்திரிந்தால் உயிர்கள் பலி
திருப்பதி மாநகராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதுவரை 2 லட்சத்து 8 ஆயிரத்து 764 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. யாருக்கேனும் கொரோனா அறிகுறி காணப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பாசிட்டிவ் காணப்படுவோர் பெரும்பாலும் வெளியில் சுற்றித்திரிபவர்கள் ஆவார்கள். அவர்கள் சரியாக முகக் கவசம் அணிவதில்லை. சமூக விலகலை கடைப்பிடிப்பது இல்லை. இதனால் தான் கொரோனா பரவல் அதிகரிக்கிறது.கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வௌியில் சுத்தித்திரிந்தால் உயிர்கள் பலியாகலாம். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான விஷ்ணு நிவாசம் விடுதியில் கொரோனா மருத்துவச் சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அங்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மருந்து, உணவு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து கமிஷனர் கிரிஷா திருப்பதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் திடீரென ஆய்வு செய்தார். அந்த நிறுவனத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாததால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். அப்போது போலீசார், அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்