முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை - உள்துறை அமைச்சகம் சிபாரிசு

முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது.

Update: 2021-08-05 00:28 GMT
புதுடெல்லி,

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அலோக் வர்மா, சி.பி.ஐ. இயக்குனராக நியமிக்கப்பட்டார். அப்போது சி.பி.ஐ. துணை இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனாவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இருவரும் ஊழல் குற்றச்சாட்டுகளை மாறிமாறி தெரிவித்துக்கொண்டனர். இதையடுத்து, 2 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அலோக் வர்மா வேறு பணிக்கு மாற்றப்பட்டார். அதை ஏற்காத அவர், தான் ஓய்வு பெற்றதாக கருதுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இந்தநிலையில், அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.ஐ.யை நிர்வகிக்கும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது. அந்த சிபாரிசை, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பரிசீலனைக்கு பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அலோக் வர்மாவின் ஓய்வூதியம் அல்லது ஓய்வுகால பலன்கள் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பறிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்