ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: இடைக்கால தடையை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-10 00:13 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெற ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, கருப்பு பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் கடந்த மார்ச் 5-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என சி.பி.ஐ.க்கு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த மே 18-ந் தேதி விசாரித்தது. அப்போது, சி.பி.ஐ கோர்ட்டில் நடைபெறும் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்கும், அனைத்து ஆவணங்களையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. சி.பி.ஐ. மனு தொடர்பாக பதில் அளிக்க ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தா நேற்று மீண்டும் விசாரித்தார். அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் அனுபம் சர்மா, எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி முக்தா குப்தா, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவது தொடர்பான விவகாரத்துக்கு அதிர்ஷ்டவசமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்வு கண்டுள்ளது. குற்றவியல் வழக்கு விசாரணையில் உள்ள குறைபாடுகளை களைய சட்டங்களை 6 மாதங்களுக்குள் உருவாக்க மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 20-ந் தேதி உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார்.

அதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை படித்து பார்த்து பதில் அளிக்க கால அவகாசம் தேவை என சி.பி.ஐ. வக்கீல் அனுபம் சர்மா கோரினார். கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை இம்மாதம் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்