கொரோனா தொற்று பரவலை அரசு கட்டுப்படுத்தி உள்ளது; புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை

புதுச்சேரி சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா தொற்று பரவலை அரசு கட்டுப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-26 06:22 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் 15வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.  இதில், புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் உரையாற்றினார்.  புதுச்சேரியில் இன்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, திருக்குறளுடன் தனது உரையை தொடங்கி அவையில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்ட நிலையில், தொற்று பரவலை அரசு கட்டுப்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

எனவே கொரோனாவை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.  250 காய்கறி விதைப்பைகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 11 டிராக்டர்கள், 9 பவர் டிரில்லர்கள், நெல் நடவு இயந்திரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் அவையில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 2020-21ம் ஆண்டில் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் எதிர்பார்த்த நிலையில் ரூ.8,419 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. மாடித்தோட்டத்தை ஊக்குவிக்க ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள விதைகள் அடங்கிய பைகள் 75% மானியத்தில் வழங்கப்படும். வருவாயை பெருக்கும் வகையில் புதுச்சேரி பட்ஜெட் இருக்கும் என்று நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்