நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்!

மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-07 04:53 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.  கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. 

நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வர்கள் www.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு (GOI) கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது.  நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கட்டும்.”  என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். 

முன்னதாக  நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் பல்வேறு தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை செய்த சுப்ரீம்கோர்ட்டு, நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால் ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை ஒத்திவைக்க முடியாது. திட்டமிட்டபடி நீட் தேர்வு கட்டாயம் நடந்தே தீரும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்