ராஜஸ்தானில் ‘டூப்ளிகேட் சிம்’ மோசடியால் ரூ.68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகரைச் சேர்ந்தவர், கிருஷ்ணலால் நைன். இவருடைய செல்போன் சிம் கார்டு கடந்த 2017-ம் ஆண்டு மே 25-ந் தேதி செயல்படாமல் முடங்கிவிட்டது.

Update: 2021-09-11 20:31 GMT
அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தை கிருஷ்ணலால் தொடர்புகொண்டபோது, மறுநாளே அவருக்கு புது சிம் கார்டு வழங்கப்பட்டது. ஆனால் அது ஒரு வாரம் கழித்துத்தான் ஆக்டிவேட் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஆல்வார் நகரைச் சேர்ந்த பானு பிரதாப் என்பவருக்கு, கிருஷ்ணலாலின் செல்போன் எண்ணில் ஒரு ‘டூப்ளிகேட் சிம்கார்டு’ வழங்கப்பட்டுவிட்டது.கிருஷ்ணலாலின் புதிய சிம் கார்டு ஆக்டிவேட் ஆனபோது, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.68.5 லட்சம் எடுக்கப்பட்டிருப்பதும், அதற்கு அவர் எண்ணில் இருந்து அனுப்பப்பட்ட ஓ.டி.பி. பயன்படுத்தப்பட்டிருப்பதும் குறுந்தகவல் மூலம் தெரியவந்தன.இது தொடர்பாக கிருஷ்ணலாலின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.அதில், பானு பிரதாப்புக்கு அந்த செல்போன் நிறுவனம் கிருஷ்ணலாலின் செல்போன் எண்ணில் ‘டூப்ளிகேட் சிம் கார்டு’ வழங்கியிருப்பதும், அதைப் பயன்படுத்தி அவர் பணம் எடுத்திருப்பதும் தெரியவந்தன. இந்நிலையில் பானு பிரதாப், கிருஷ்ணலாலுக்கு ரூ.44 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதமுள்ள ரூ.27.5 லட்சம் கொடுக்கப்படவில்லை.

அதுகுறித்து ராஜஸ்தான் அரசு தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளரும், தீர்ப்பு அதிகாரியுமான அலோக் குப்தாவிடம் கிருஷ்ணலால் புகார் அளித்தார். அதில், தனக்கு வரவேண்டிய மீதத்தொகையை அதற்கான வட்டியுடன் சேர்த்து ரூ.34.50 லட்சமாக வழங்க குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், ‘அந்த செல்போன் நிறுவனம் கிருஷ்ணலாலின் வங்கிக் கணக்கில் ஒரு மாதத்துக்குள் ரூ.27 லட்சத்து 53 ஆயிரத்து 183-ஐ செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் 10 சதவீத வட்டியுடன் தொகையை செலுத்த நேரிடும்’ என்று தீர்ப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்