சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

சில்லரை விலையை குறைக்கும் வகையில் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்து உள்ளது.

Update: 2021-09-12 01:32 GMT
புதுடெல்லி,

இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலில் கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை தொடர்ந்து 3-வது இடத்தில் இருப்பது சமையல் எண்ணெய் ஆகும். உள்நாட்டில் சமையல் எண்ணெய்களுக்கான சில்லரை விலையை குறைக்கும் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் கச்சா பாமாயிலுக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதைப்போல கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கான இறக்குமதி வரியும் 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இந்த வரி குறைப்பு மூலம், கச்சா பாமாயில், கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான வரி 24.75 சதவீதமாக குறையும். அதே சமயம் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான வரி 35.75 சதவீதமாக இருக்கும் என தொழில்துறை அமைப்பான சால்வன்ட் சங்கம் கூறியுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவில் மேற்படி எண்ணெய்களின் சில்லரை விலை லிட்டருக்கு 4 அல்லது 5 ரூபாய் வரை குறையலாம் என இந்த சங்கத்தின் நிர்வாக இயக்குனர் மேத்தா கூறியுள்ளார். ஆனால் இந்தியா இறக்குமதி வரியை குறைத்த பிறகு சர்வதேச சந்தையில் இந்த எண்ணெய்களின் விலைகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் இந்த வரி குறைப்பின் உண்மையான தாக்கம் ரூ.2 அல்லது ரூ.3 ஆக மட்டுமே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய மறைமுக வரிகள் வாரியம் கடந்த மாதம் கச்சா சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை 7.5 சதவீதமாக குறைத்து வினியோகத்தை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்