சினிமா விமர்சகரின் மனு குறித்து பதில் அளிக்க சல்மான்கானுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சினிமா விமர்சகரின் மனு குறித்து பதில் அளிக்க நடிகர் சல்மான்கானுக்கு மும்பை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2021-09-17 00:38 GMT
கோப்பு படம்
மும்பை, 
சினிமா விமர்சகரின் மனு குறித்து பதில் அளிக்க நடிகர் சல்மான்கானுக்கு மும்பை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சினிமா விமர்சகர் மனு
மும்பையை சேர்ந்த கமால் கான் என்ற சினிமா விமர்சகர் சல்மான்கான் நடித்து வெளியான ‘ராதே' படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து நடிகர் சல்மான்கான் மும்பை கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட்டு கமால்கான் நடிகர் சல்மான்கான், அவரது படங்கள், நிறுவனத்திற்கு எதிராக கருத்து கூற கூடாது என இடைக்கால தடைவிதித்தது. 
இதை எதிர்த்து கமால்கான் மும்பை ஐகோா்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
சல்மான்கானுக்கு நோட்டீஸ்
அந்த மனுவில், '' சினிமா விமர்சகர் ஆன நான், நியாயமான முறையில் ராதே படத்தை விமர்சித்து இருந்தேன். நடிகர் சல்மான்கான், அவரது நிறுவனத்திற்கு எதிராக அவதூறாக எதையும் நான் பதிவிடவில்லை. எனக்கு எதிராக கீழ் கோர்ட்டு விதித்து உள்ள உத்தரவு சட்டவிரோதமானது" என கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.எஸ். கட்காரி முன் நடந்தது. அப்போது அவர் கமால் கானின் மனு குறித்து பதில் அளிக்குமாறு நடிகர் சல்மான், அவரது படதயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் செய்திகள்