182 பேரை பலிகொண்ட காபூல் தாக்குதல் பயங்கரவாதி டெல்லியில் கைதாகி சிறை தண்டனை பெற்றவர்...

காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி டெல்லியில் கைதாகி சிறை தண்டனை பெற்றவர் என ஐ.எஸ்.ஐ.எஸ். ஹரசன் அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-09-18 07:40 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15-ம் தேதி தலீபான்கள் கைப்பற்றியது. இதையடுத்து, அங்கு சிக்கி இருந்த தங்கள் நாட்டு மக்களையும், ஆப்கானிஸ்தான் மக்களையும் கடந்த 31-ம் தேதி வரை அமெரிக்கா மீட்டது. இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெற்றது.

இதற்கிடையில், இந்த மீட்பு பணிகள் நடைபெற்றுகொண்டிருந்த போது கடந்த 26-ம் தேதி மாலை 6 மணியளவில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை காபூல் விமான நிலையத்தில் வெடிக்கச்செய்தார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 169 ஆப்கானியர்கள் மற்றும் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் என மொத்தம் 182 பேர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பொறுப்பேற்றது. அப்தர் ரஹ்மான் அல்-லஹோரி என்ற பயங்கரவாதி இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினான்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அப்தர் ரஹ்மான் அல்-லஹோரி இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் என ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஹரசன் பிரிவின் பிரசார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் பழி தீர்ப்பதற்காக அப்தர் ரஹ்மான் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு டெல்லி சென்றதாகவும், டெல்லியில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றதாகவும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.

சிறை தண்டனை முடிவடைந்த பின்னர் அப்தர் ரஹ்மான் ஆப்கானிஸ்தான் வந்ததாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஹரசன் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்