எந்த நாடும் செய்ய முடியாததை இந்தியா செய்திருப்பது மகிழ்ச்சி; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

Update: 2021-09-23 19:19 GMT
ரூ.50 ஆயிரம் இழப்பீடு
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரிய பொதுநல மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘கொரோனாவால் இறந்தவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், கொரோனா பாதிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகையை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வாயிலாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. இருப்பினும் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த நாடு தன்னால் இயன்ற உதவியை அளிக்க முடிவு செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு பாராட்டு
அப்போது நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் ‘இன்று எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனாவால் இறந்தவர்களை இழந்து கஷ்டப்படும் குடும்பங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். அவர்களது கண்ணீரை துடைக்க இழப்பீட்டு தொகையை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.எந்த நாடும் செய்ய முடியாததை இந்தியா செய்திருக்கும் உண்மையை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் குறிப்பிட்டாக வேண்டும்’ என தெரிவித்து, இந்த மனுக்கள் மீதான உத்தரவை அக்டோபர் 4-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு, இந்திய அரசின் செயல்பாட்டை, சுப்ரீம் கோர்ட்டு அதன் தீர்ப்பில் குறிப்பிட்டால் அது மத்திய அரசுக்கு கிடைத்த பாராட்டாக அமையும் என்பது சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் செய்திகள்