கேரளாவில் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீராங்கனை சுசீலா மரணம்

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர், சுசீலா. இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக களமாடிய இவர், நாட்டு விடுதலைக்குப்பின் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.

Update: 2021-09-23 21:09 GMT
முதுமை காரணமாக பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த சுசீலா நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 100. இவரது இறுதிச்சடங்குகள் நேற்று மாலையில் நடந்தது.1921-ம் ஆண்டு பிறந்த சுசீலா, தனது பள்ளிப்படிப்புக்குப்பின் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். 1943-ல் சுதந்திர போராட்டத்தில் குதித்த இவர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். இதற்காக வேலூர் சிறையில் 2 மாதம் அடைக்கப்பட்டிருந்தார். சிறந்த காந்தியவாதியான இவர், கதர் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தார்.

இவரது கணவர் குஞ்ஞூகிருஷ்ணனும் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இந்த தம்பதிக்கு இந்துதரன் என்ற மகனும், நந்திதா என்ற மகளும் உள்ளனர்.

புகழ்பெற்ற பெண் விடுதலைப்போராட்ட வீராங்கனைகளான குட்டிமாலு அம்மா, அம்மு சுவாமிநாதன், இந்திய தேசிய ராணுவ கேப்டன் லட்சுமி, புகழ்பெற்ற நடனக்கலைஞர் மிருணாளினி சாராபாய் ஆகியோர் அடங்கிய அணக்கரா வடக்கத் குடும்பத்தின் கடைசி உறுப்பினர் சுசீலா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்