65 மணி நேரத்தில் அமெரிக்காவில் 20 சந்திப்புகளில் பங்கேற்ற மோடி

பிரதமர் மோடி ‘குவாட்’ உச்சி மாநாடு, ஐ.நா. பொதுச்சபை கூட்டம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான சந்திப்பு ஆகியவற்றுக்காக 4 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அவர் குறுகிய காலத்தில் சுமார் 20 சந்திப்புகளை நடத்தி அசத்தி இருக்கிறார்.

Update: 2021-09-26 16:44 GMT
மோடி நடத்திய சந்திப்புகள்

அவர் அமெரிக்காவில் தங்கி இருந்தது, 65 மணி நேரம். அவர் தனது அமெரிக்க பயணத்தின்போது சுமார் 20 சந்திப்புகளை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

* மோடி 22-ந் தேதி அமெரிக்காவுக்கு சென்றபோது விமான பயணத்தின்போது அதிகாரிகளுடன் 2 நீண்ட சந்திப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார். அமெரிக்கா சென்றடைந்ததும் வாஷிங்டன் ஓட்டலில் 3 சந்திப்புகள்.

* 23-ந் தேதி அமெரிக்காவின் முன்னணி 5 தொழில்நிறுவனங்களின் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தினார்.

* அதே நாளில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுடன் சந்திப்பு. அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசனுடன் சந்திப்பு. இது போக 3 உள்கூட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி இருக்கிறார்.

* 24-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்திப்பு.

*25-ந் தேதி அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பின்னர் விமானத்தில் 2 சந்திப்புகளை மோடி நடத்தி உள்ளார்.

டெல்லி திரும்பினார்

பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று காலை டெல்லி திரும்பினார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர்கள் அருண் சிங், தருண் சுக், முன்னாள் சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன், டெல்லி பா.ஜ.க. தலைவர் அதேஷ் குப்தா, மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.

இந்தியாவை உலகில் முக்கிய இடத்துக்கு கொண்டு சென்ற உலகளாவிய தலைவர் மோடி என ஜே.பி. நட்டா பாராட்டினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்தியாவை இப்போது புதிய வெளிச்சத்தில் உலகம் பார்க்கிறது. உலக வளர்ச்சிக்கு பிரதமர் பங்களிப்பு செய்துள்ளார். குவாட் உச்சி மாநாட்டிலும், ஐ.நா. பொதுச்சபையிலும் பேசுகையில் பிரதமர் மோடி உலக விஷயங்களில் வலுவாகவும், வெளிப்படையாகவும் கருத்துகளை எடுத்து வைத்தார். இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் புகழ் தேடித்தந்திருக்கிறார்” என கூறினார்.

இந்தியாவின் 157 கலைப்பொருட்களை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மீட்டு வந்ததற்கும் அவர் மோடியை பாராட்டினார்.

தன்னை வரவேற்க வந்தவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும் செய்திகள்