மேகாலயா ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

மேகாலயா மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2021-10-01 11:56 GMT
ஷில்லாங், 

மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து, கிழக்கு காரோ மற்றும் மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லை அருகே அதிகாலை வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நோங்ச்ராம் பாலத்தில் இருந்து ரிங்டி ஆற்றில் விழுந்தது.

இதில், பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ரோங்ஜெங் மற்றும் வில்லியம் நகர் பகுதி தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.  படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று மேலும் இரண்டு பேரின் உடல்களை போலீசார் மீட்டு உள்ளனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆனது. மேகாலயா போக்குவரத்து கழகத்தின் இரண்டாம்  ஓட்டுநர் டப்போர்லாங் வான்கர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த பயணியான லார்சன் எம் மராக் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 16 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்