“காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது” - பரூக் அப்துல்லா திட்டவட்டம்

காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது என்று அதன் முன்னாள் முதல்-மந்திரியான பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்தார்.

Update: 2021-10-13 23:56 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, அங்குள்ள ஸ்ரீநகரில், சமீபத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பள்ளிக்கூட முதல்வர் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். காஷ்மீர், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும்.

அவர்கள் (பயங்கரவாதிகள்) என்னை சுட்டுத்தள்ளினாலும் இதை மாற்ற முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களை (பயங்கரவாதிகளை) எதிர்த்து தைரியத்துடன் போராட வேண்டும். பயப்படக்கூடாது. இளம் மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியரைக் கொல்வது, இஸ்லாமிய மதத்துக்கு சேவை செய்வது ஆகாது.

ஒரு புயல் இந்த நாட்டில் உருவாகிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்துக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள். இந்த பிரிவினை அரசியலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா பிழைக்காது அல்லது இருக்காது. இந்தியா காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வளம்பெறும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்