காஷ்மீரில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி- பரூக் அப்துல்லா

காஷ்மீரில் சமீப காலமாக பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

Update: 2021-10-18 03:29 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீரில் சமீப காலமாக பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் அங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். 

நடப்பு மாதத்தில் மட்டும் வெளி மாநிலங்களை சேர்ந்த 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களும் இந்த தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளனர். 

இந்த நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- காஷ்மீரில் சமீபகாலமாக நடந்து வரும் அப்பாவி மக்கள் கொலைகள் துரதிருஷ்டவசமானவை. ஒரு சதித்திட்டத்தின்கீழ் இவை நடந்து வருகின்றன. இவற்றில் காஷ்மீரிகள் சம்பந்தப்படவில்லை. ஆனால் அவர்களை இழிவுபடுத்த இவை செய்யப்படுகின்றன.

அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நட்புறவை உருவாக்க எடுக்கப்படும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கதுதான். அதன்மூலம் நாங்கள் அமைதியாக வாழ்வதை விரும்புகிறோம்” என்றார். 

மேலும் செய்திகள்