உத்தரகாண்டில் மழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் தீவிரம்

நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை பேரிடர் மீட்புப்படையினர் வழங்கி வருகின்றனர்.

Update: 2021-10-20 16:02 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்தது.   மலைப்பகுதிகள் நிறைந்த மாநிலம் என்பதால், மழையை தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது.  

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.  உத்தரகாண்டில் தற்போது மழை ஓய்ந்துள்ளது. இதனால், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழை வெள்ள சேதப் பகுதிகளை உத்தரகாண்ட்  முதல்-மந்திரி  புஷ்கர்சிங் தாமி  ஆய்வு செய்தார். 

நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை பேரிடர் மீட்புப்படையினர் வழங்கி வருகின்றனர். நைனிடாவில் உள்ள கவுலா நதியில் ஆர்ப்பரித்த காட்டாற்று வெள்ளத்தால் ரெயில் நிலைய தண்டவாளம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. 

இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை சீரடைய தொடங்கியிருப்பதால் நைனிடால் உள்ளிட்ட பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. கடைகள் திறக்கப்பட்டு வாடகை வாகனங்களும் ஓடத்தொடங்கியுள்ளன. எனினும், தொலைத்தொடர்பு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 

மேலும் செய்திகள்