கொரோனா தடுப்பூசியில் சாதனை! - 100 கோடி இலக்கை எட்டிய இந்தியா

தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 85 நாட்களில் முதல் 10 கோடி (100 மில்லியன்) டோஸ் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறி உள்ளது.

Update: 2021-10-21 06:12 GMT
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. கொரோனா பரவல் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 9 மாதங்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடியை கடந்துள்ளது.

இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் போடப்பட்ட  தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.  ஜப்பானை விட ஐந்து மடங்கு, ஜெர்மனியை விட ஒன்பது மடங்கு மற்றும் பிரான்சில் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்று  மத்திய அரசு வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்து உள்ளது.

எட்டுமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 சதவீதம் பேர்  முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். ஜம்மு -காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், சிக்கிம், இமாசலப் பிரதேசம், தத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, கோவா மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில்  100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முதல் டோஸ் தடுப்பூசி  90 சதவீதத்தை எட்டி உள்ளன.

தடுப்பூசி போடும் பணி  ஜனவரி 16, 2021 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தால் கடந்து வந்த மைல்கற்களை மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது.

தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 85 நாட்களில் முதல் 10 கோடி (100 மில்லியன்) டோஸ் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறி உள்ளது.

கோவின் - டிஜிட்டல் தளத்தில் இதுவரை 76 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். நாட்டின் தொலைதூர மூலைகளுக்கு தடுப்பூசிகளை வழங்க இந்தியா முதன்முறையாக டிரோன்களைப் பயன்படுத்தியது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 17 அன்று (பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள்) ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு  தடுப்பூசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. இது ஒரு மணி நேரத்திற்கு 15.62 லட்சம் டோஸ் அல்லது நிமிடத்திற்கு 26,000 டோஸ் அல்லது ஒவ்வொரு நொடியும் 434 டோஸ்  என  கணக்கிடப்பட்டு உள்ளது.

வெறும் ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டாலும், போலியோ தடுப்பூசி 1994-2014) மற்றும் காசநோய் தடுப்பூசி (1989 மற்றும் இன்னும்) 32 ஆண்டுகள் மைல்கல்லை கடக்க 20 ஆண்டுகள் ஆனது.

சீனா மட்டுமே இதுவரை 100 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது (மேலும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது). சீனா ஜூன் மாதம் மைல்கல்லை தாண்டியது.


மேலும் செய்திகள்