போதை பொருள் விவகாரம்; நடிகை அனன்யா பாண்டே நாளை ஆஜராக உத்தரவு

நடிகை அனன்யா பாண்டேவை நாளை காலை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போதை பொருள் தடுப்பு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-10-21 14:28 GMT


மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கப்பலில் சென்றனர்.  அப்போது, தேசிய போதை பொருள் தடுப்பு படையினர், ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  ஜாமீன் கிடைக்காததால், மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார்.

இந்த நிலையில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் அனன்யா பாண்டேவிற்கு சம்மன் அனுப்பினர்.  இதனையடுத்து அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜரானார்.

இதனிடையே,  போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.  அதேபோல், நடிகை அனன்யா பாண்டே வீடும் சோதனைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

நடிகை அனன்யா பாண்டே மற்றும் அவரது தந்தை சங்கி பாண்டே ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள்.  இந்த நிலையில், நடிகை அனன்யா பாண்டேவை நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போதை பொருள் தடுப்பு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்