'நாங்கள் தோழர்கள், காதலர்கள் அல்ல' அமரிந்தர் சிங் உடனான நட்பு குறித்து அரூசா ஆலம்

கேப்டன் அமரிந்தர் சிங்கின் நீண்டகால நண்பரும், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளருமான அரூசா ஆலம், பஞ்சாபில் அரசியல் சர்ச்சையில் இழுக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-10-27 05:25 GMT
புதுடெல்லி

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி  சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதை அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்தது.

இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங், செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

தொடர்ந்து, சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் திடீர் பயணமாக  டெல்லி சென்றார். அங்கு பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். ஆனால்  பா.ஜ.க.வில்  இணைய வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தார். 

இன்று அமரிந்தர் சிங் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். அதற்காக  அவர் பத்திரிகையாளர்களை இன்று சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில் கேப்டன் அமரிந்தர் சிங் குறித்தும், அவரது  ஆத்ம நண்பரும் பத்திரிகையாளருமான அரூசா ஆலம்  குறித்தும் பஞ்சாப் துணை முதல் மந்திரி சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

கேப்டன் அமரிந்தர் சிங்கின் நீண்டகால நண்பரும், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளருமான அரூசா ஆலம், பஞ்சாபில் அரசியல் சர்ச்சையில் இழுக்கப்பட்டுள்ளார். 

இன்று  இஸ்லாமாபாத்தில் இருந்து இந்தியா டுடேவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில்,  ஐஎஸ்ஐ உடனான தொடர்பு மற்றும் அமரிந்தர் சிங் பஞ்சாப் முதல் மந்திரியாக  இருந்தபோது, அவர் மீது செல்வாக்கு செலுத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

அமரிந்தர் சிங்குடனான உறவு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அரூசா ஆலம், நாங்கள்  ஆத்ம தோழர்கள், காதலர்கள் அல்ல. 

நாங்கள் துணையாக இருந்தோம். நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு வயது 56, அவருக்கு வயது 66. இவ்வளவு வயதில் நாங்கள் காதலர்களைத் தேடவில்லை. நாங்கள் நண்பர்கள், தோழர்கள் மற்றும் ஆத்ம தோழர்களாக இருந்தோம்.

காதல் மற்றும் காதல் விவகாரங்கள் இல்லாத ஒரு கட்டத்தில் நாங்கள் சந்தித்தோம். நாங்கள் ஆத்ம நண்பர்களாகவும் நல்ல குடும்ப நண்பர்களாகவும் இருந்தோம். நான் அவரது தாயார், அவரது குடும்பத்தினர், சகோதரிகளை சந்தித்துள்ளேன் என கூறினார்.

பஞ்சாப் துணை முதல் மந்திரி சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, சீக்கிய மதத்தில் "காதல் விவகாரங்கள்" அனுமதிக்கப்படவில்லை. வேறொரு பெண்ணுடன் வாழ்வது தவறாகக் கருதப்படுகிறது. அரூசா ஆலம் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவில்  கேப்டன் அமரிந்தருடன் நான் சண்டையிட்டேன் என நேற்று அவர் கூறியிருந்தார்.

அதுபோல் கடந்த வாரம், ஆலமின் ஐஎஸ்ஐ தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ரந்தவா கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்