ராஜஸ்தானில் பள்ளி, கல்லூரிகள் 100 சதவீத செயல்திறனுடன் இயங்க அனுமதி

கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ராஜஸ்தானில் பள்ளி, கல்லூரிகள் 100 சதவீத செயல்திறனுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-09 18:29 GMT
ஜெய்ப்பூர்,

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல்  இருந்தன. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் 50 சதவீத இருக்கையுடன் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்,  1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வகுப்பறை செயல்பாடுகள் 100 சதவீத திறனுடன் நடைபெறலாம் என்று நேற்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 15-ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுடன் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 50 சதவீத இருக்கையுடன் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வந்த நிலையில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிற்சி நிறுவனங்களில் 100 சதவீத இருக்கையுடன் செயல்பட ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்